Thursday, 2 June 2011

விஜய் போக்கை மாற்றிய கடிதம்

நலமா?

50 படங்கள் முடித்திருப்பதற்கு முதல்ல வாழ்த்துக்கள். ரஜினி, கமல் என்னும் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் ஹீரோக்களின் இடத்தைப் பிடிப்பதற்கு முட்டிமோதுவோரில் நீங்கள் முதல் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் படங்கள் முதல் தரமானதாக இருக்கிறதா?

'நாளைய தீர்ப்பு' படத்தில் நீங்கள் அறிமுகமானபோது, இப்போதைய இந்த உயரத்தை நீங்கள் எட்டுவீர்கள் என்று யாரும் நினைத்தது இல்லை. உங்கள் வளர்ச்சிக்கு சினிமா துறையில் இருந்த உங்கள் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் காரணம் என்று சொல்வார்கள். அது ஆரம்ப காலத்தில் உண்மை. ஆனால், படிப்படியாக, நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டு, கடுமையாக உழைத்துத்தான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்றும் தமிழ் சினிமா ஹீரோக்களில் டான்ஸ் ஆடுவதில், 'உங்களை மிஞ்ச ஆள் இல்லை' என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார் கள். இதெல்லாம் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த பரிசுங்ணா!
'விஷ்ணு', 'ரசிகன்', 'கோயம்புத்தூர் மாப்ளே' போன்ற படங்கள் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றிப்போட்டது 'பூவே உனக்காக'. நீங்கள் நடித்த 'காதலுக்கு மரியாதை' மக்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதையான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 'பிரியமுடன்' படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தையும் சாதித்துக் காட்டினீர்கள். 'லவ் டுடே' படத்தில் பாசமுள்ள மகனாக மிரட்டி எடுத்தீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி' போன்ற படங்கள் மூலம் பலதரப்பட்ட வயதினரும் உங்கள் ரசிகர்கள் ஆனார்கள்.

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நீங்கள் பட்டையைக் கிளப்பிய காமெடியை இன்றும் சேனல்களில் பார்க்கும்போது சிரிப்பு. ஆனால், திடீரென்று 'பத்ரி' தொடங்கி 'புதிய கீதை' வரை தடம் மாறினீர்கள். தொடர் தோல்விகள். ஆனாலும், 'திருமலை' உங்கள் திருப்புமுனைதாங்ணா!

பல்லு விளக்குவதற்குக்கூட பஞ்ச் டயலாக் பேசுவது, காத்துல பறந்து கரணம் அடிப்பது, அம்புட்டுத்தான்... ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டீர்கள்!
 உங்கள் நினைப்பு சரிதான். நீங்கள் அடித்த 'கில்லி', நடித்த 'திருப்பாச்சி', வெடித்த 'சிவகாசி' எல்லாமே வசூலில் சாதனை படைத்தன. அதில் இருந்துதான் படம் ஹிட் அடிக்க 'பஞ்ச் டயலாக்கும், பான்பராக் ரவியுமே போதும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு இருந்துதான் உங்களையும் அறியாமல் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தீர்கள். இந்த இடத்தில் 'கில்லி'யைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அதில் ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாமே பக்காவாக இருந்தது. 'அப்படிப் போடு... போடு' என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. அநேகமாக நீங்கள் நடித்து எல்லோருக்கும் பிடித்த கடைசிப் படம் என்ற அந்தஸ்து தற்போது வரை 'கில்லி' வசம்தான். கொஞ்சம் 'போக்கிரி'க்கும் கொடுக்கலாம்!

இடையில் 'குஷி'யில் செய்த குறும்பு இளைஞன் கேரக்டரை 'சச்சினி'ல் மீண்டும் கொண்டுவந்தீர்கள். ஆனால், அந்தப் படம் சுமாராக ஓடியதால் மீண்டும் பான்பராக் ரவியிடமே திரும்பிவிட்டீர்கள். இன்றைக்கு நீங்கள் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வெற்றிகரமான ஹீரோ என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் நடிக்க வந்தபோதும், அதற்குப் பின்பும் வந்த விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி என்று பலரும் வித்தியாசமான கதைகளில், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துத் தங்கள் திறமையை நிரூபித்தனர். ஆனால், நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. (சத்தியமாச் சொல்றேண்ணா... 'வேட்டைக்காரன்' போஸ்டருக்கும் 'சுறா' போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துத்தான் நான் வித்தியாசம் கண்டுபிடிக்கிறேன்!) இந்தப் பிடிவாதம் கெட்டப்பில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?

ஆனால், மாஸ் ஹீரோவாகிய நீங்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, செல்வராகவன், முருகதாஸ், கௌதம்மேனன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பரிசீலனைப் பட்டியலில்கூட இல்லையே, ஏன்?

விஜய் படம் என்றாலே, சடை முடி வில்லன்கள், பஞ்ச் டயலாக், ஸ்லோ

மோஷனில் நடப்பது, பில்ட்-அப் கொடுப்பது என்று ஆகிவிட்டதே. உங்களைப்பற்றியும், உங்கள் படங்களைப்பற்றியும் கிண்டல் அடித்து எஸ்.எம்.எஸ்கள் கொட்டிக் குவிகின்றன என்பது உங்களுக்கும் தெரியும். சிறிது காலம் முன்பு வரை அந்த எஸ்.எம்.எஸ்களைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வரும். எரிச்சல் வரும். ஆனால், உங்களது சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது அந்த எஸ்.எம்.எஸ்-கள் உண்மையைத்தான் சொல்கின்றன என்றே தோன்றுகிறது. உங்க படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், மத்தவங்க உங்களைத்தான் பெரிய வில்லன்னு சொல்றாங்க!



உங்கள் படம் எப்படி இருந்தாலும் முதல் நாளிலேயே முண்டியடித்துப் பார்க்கிற என்னை மாதிரி லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த மாஸ் ஓப்பனிங் எவ்வளவு பெரிய கிஃப்ட்ணா!


அண்ணா, நீங்கள் ரொம்ப சிம்பிள். அதற்காக உங்களின் கதையும் சிம்பிளாக இருக்க வேண்டுமா? நீங்கள் நடித்த கடைசி மூன்று படங்களில் இருந்தே அடுத்த படத்துக்கான கதையைத் தயார் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதை நான் கிண்டலுக்குச் சொல்லலைண்ணா. உண்மையான வேதனை. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி கதையில் நடிங்க. நல்ல கருத்துக்களை, நல்ல ரசனையை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களால் இதை நிச்சயமாகச் செய்ய முடியும்.

ஆரம்ப நாட்களில் 'உங்கள் விஜய்' என்று டைட்டிலில் போட்டுக்கொள்வீர்கள். ஆனால், நீங்கள் ஆக்ஷனில் வெடித்து பட்டையைக் கிளப்பத் தொடங்கிய 'இளைய தளபதி' அவதாரம் எடுத்த பிறகு, நீங்கள் 'எங்கள் விஜய்'யாக இல்லை.வருங்காலத்தில் தரமான படத்தில் நீங்கள் நடித்தால் நானும் 'விஜய் ரசிகன்' என்று சொல்லி 'போக்கிரி' தமிழ்போல காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன்.


கடைசியாக ஒரு உண்மை சொல்லட்டுமாண்ணா... தற்போதைய தமிழ் ஹீரோக்களில் காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் எனக் கலந்து கட்டி கலகலக்கவைக்கும் பக்கா என்டர்டெயினர் நீங்கள் மட்டுமேதான்.
YOURS LOVINGLY
UNGAL RASIGAN 





1 comment:

  1. vijay anna unmailae different ana kathaikala therntheduthu nadikkanum,all the best anna for your future projects and forever place as a hero
    of the world

    ReplyDelete